மும்பை போரிவலி இரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் பொதுமக்களும் போலீசாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு பெண்ணின் காலைப் பிடித்துக்கொண்டு தரையில் படுத்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் பரப்பபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், நீல நிறச் சட்டையும் கருப்பு நிறப் பேன்ட்டும் அணிந்த ஒரு இளைஞர், மேடையில் மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு இளம் பெண்ணின் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். சுடிதார் அணிந்து, முகத்தை ஷாலால் மூடியபடி முதுகில் பையோடு இருக்கும் அந்தப் பெண், அவரிடமிருந்து விடுபடத் தொடர்ந்து முயன்றபோதிலும் அந்த இளைஞர் காலை விடுவதாக இல்லை. இந்த வீடியோவின் மேல் “உண்மையான காதல்” என்றும் “போரிவலி இரயில் நிலையம்” என்றும் எழுதப்பட்டுள்ளது.
https://www.instagram.com/reel/DanOC_uMEIK/?utm_source=ig_web_button_share_sheet
இந்த அசாதாரணமான நாடகம் அரங்கேறியபோது, அங்கு நின்றிருந்த இரயில்வே பாதுகாப்புப் படையினர் தலையிட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். வீடியோவின் அடுத்த பகுதியில், அந்த இளைஞர் தரையில் அமர்ந்திருக்க, போலீசார் அவரிடம் விசாரணை நடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ என்ன நடந்தது என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சிலர் இதனை “தீவிரமான காதல்” என்று உருகினாலும், பலர் இது பொது இடத்தில் நடத்தப்படும் தேவையற்ற நாடகம் என்று விமர்சித்து வருகின்றனர். ஒரு பயனர், “காதல் ஒரு மோசமான விஷயம்” என்று பதிவிட, மற்றொருவரோ, “இப்படி காதலிக்கும் ஆண்க இப்போது எங்கே கிடைக்கிறார்கள்?” என்று ஆதங்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், “இதற்கெல்லாம் பதிலாகப் பெற்றோரின் காலில் விழுந்து ஆசி வாங்கினால் வாழ்க்கையில் முன்னேறலாம்” என்று பல நெட்டிசன்கள் இந்த இளைஞரைக் கேலி செய்து வருகின்றனர். இதுவரை மும்பை போலீசாரோ அல்லது இரயில்வே நிர்வாகமோ இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.
