திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த மறைந்த மனோகரனின் மூத்த மகன் கோபி என்பவர்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். மனோகரனுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்தை அவரது இரண்டு மகன்களான கோபி மற்றும் ஜோதிராஜுக்கு தலா 85 சென்ட் வீதம் சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார். தந்தை மறைந்த பிறகு, தம்பிக்கு வழங்கப்பட்ட நிலத்தையும் தனக்கே தர வேண்டும் என கோபி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இரு சகோதரர்களுக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக பார்வையை இழந்த தாய் விஜயலட்சுமி, இளைய மகன் ஜோதிராஜின் வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி மது போதையில் ஜோதிராஜின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கோபி, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி கடும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பெற்ற தாய் என்றும் பாராமல், சண்டையை தடுக்க முயன்ற பார்வையற்ற தாய் விஜயலட்சுமியின் முகத்தில் கோபி காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார். இதனை தடுக்க முயன்ற தம்பி ஜோதிராஜுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் இந்த கொடூரமான தாக்குதல் காட்சி அங்கிருந்தவர்களின் செல்போனில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
காயமடைந்த விஜயலட்சுமி மற்றும் ஜோதிராஜ் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஜோதிராஜ் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் அளித்து பல நாட்களாகியும் இதுவரை போலீசார் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் வேதனையுடன் குற்றம்சாட்டியுள்ளார். சொத்துக்காக பெற்ற தாயையே காலால் எட்டி உதைத்த மகனின் இந்த அநாகரிகமான செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
