சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாட்டால் இளம் வயதினர் ஆபத்துகளில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், எட்டாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, அங்குள்ள பாத்திரக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானதால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அச்சக உரிமையாளரான வைகுண்டம் (20) என்ற வாலிபருக்கும், இந்த சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 5 மாதங்களாக பழக்கம் இருந்தது தெரியவந்தது. ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பழக்கம், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சிறுமியின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்ட வைகுண்டம், அவரிடம் தொடர்ந்து ஆசை வார்த்தைகளைக் கூறி பழகி வந்துள்ளார்.
இதற்கிடையே, சிறுமியைச் சந்திப்பதற்காக வைகுண்டம் நெல்லையிலிருந்து ஈரோட்டிற்கு வந்துள்ளார். அந்தியூரில் சிறுமியைச் சந்தித்துப் பேசிய அவர், “இங்கிருந்தால் நம்மைப் பிரித்துவிடுவார்கள், என்னுடன் வந்துவிடு, நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்” எனக் கூறி வற்புறுத்தியுள்ளார். சிறுமி வர மறுத்தபோதிலும், வஞ்சகமாக ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரைத் திட்டமிட்டு திருநெல்வேலிக்குக் கடத்திச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை அவர் கட்டாயத் திருமணம் செய்ததோடு, பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டுள்ளார்.
செல்போன் சிக்னல் மற்றும் இதர ஆதாரங்களின் அடிப்படையில் சிறுமி திருநெல்வேலியில் இருப்பதை உறுதி செய்த அந்தியூர் போலீசார், விரைந்து சென்று சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். பின்னர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், வாலிபர் வைகுண்டம் மீது கடுமையான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
