தமிழ்நாடு சட்டசபை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் குதிரை பேரம் நடந்ததாக கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், மனுதாரர்கள் தரப்பிலும் அரசு தரப்பிலும் மிக கடுமையான சட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக அரசின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ என். இளையராஜாவுக்கு ₹35 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் புகாரின் பின்னணியில் இந்த விசாரணை அமைந்துள்ளது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர். இளங்கோ மற்றும் பி. குமரேசன் ஆகியோர், இந்த வழக்கு முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று வாதிட்டனர். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர ₹35 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் புகாரில் உண்மையில்லை என்றும், இவை அனைத்தும் கற்பனையானவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், சட்டசபையில் திமுகவிற்கு வெறும் 59 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஒரு எம்.எல்.ஏ-வுக்கு ₹35 கோடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க முயன்றதாகக் கூறுவது சாத்தியமற்றது என்றும், சாதாரண தொலைபேசி உரையாடலை புகார் தாரர் தனது விருப்பத்திற்கேற்ப மாற்றி சித்திரரித்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினர்.
இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யான் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். இது சாதாரண லஞ்ச வழக்கு அல்ல என்றும், ஆட்சியை நிலைகுலைய வைக்கும் மிகப்பெரிய சதித்திட்டம் என்றும் அவர் வாதிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விலைக்கு வாங்க திட்டமிட்டிருந்த 10 எம்.எல்.ஏ-க்களில் ஊத்தங்கரை எம்.எல்.ஏ-வும் ஒருவர் என்றும், இடைத்தரகருக்கு ₹5 கோடியும் எம்.எல்.ஏ-வுக்கு ₹35 கோடியும் பேசப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சதித்திட்டத்தின் பின்னணி பெங்களூர் வரை நீண்டுள்ளதாகவும், இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் நீதிமன்றத்தில் முழங்கினார்.
மேலும், சென்னை கிண்டி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தப்பட்டதற்கான சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன் டவர் லொகேஷன் விவரங்கள் தங்களிடம் உள்ளதாக அரசு தரப்பு சுட்டிக்காட்டியது. இதற்குப் பதிலடியாக, டவர் ஒரே இடத்தில் இருந்ததை வைத்துக்கொண்டு எப்படி சதித்திட்டம் என்று கூற முடியும் என செந்தில் பாலாஜி தரப்பு கேள்வி எழுப்பியது. விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாலும், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவர வேண்டியிருப்பதாலும் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வாதிட்ட நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
