மும்பையின் தாதர் இரயில் நிலையத்தில், பெண் ஒருவரை நபர் ஒருவர் இரயில் தண்டவாளத்தில் வைத்து கொடூரமாக தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், வெளிர் நிறச் சட்டை அணிந்த நபர் ஒருவர், தண்டவாளத்தில் விழுந்து கிடக்கும் பெண்ணை தொடர்ச்சியாக கைகளால் குத்தியும், கால்களால் உதைத்தும், இழுத்துச் சென்றும் கொடூரமாக தாக்குவது பதிவாகியுள்ளது. அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள போராடிய போதிலும், அந்த நபர் இரக்கமின்றி அவரைத் தொடர்ந்து தாக்கியுள்ளார். இந்த கொடூரக் காட்சி சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் மத்தியில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
இந்த கொடூர சம்பவத்தின் போது, இரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பலரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றார்களே தவிர, ஒருவர்கூட அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முன்வரவில்லை என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மும்பை காவல்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், இந்த விவகாரத்தை அரசு இரயில்வே காவல்துறையின் (GRP) கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை இரயில்வே காவல்துறை தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்த விவரங்களும் இன்னும் வெளியாகவில்லை.
