விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அங்கிருந்த மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்க முடியாமல் மாணவி திணறியபோது, “முதல் பெஞ்ச் மாணவியே இப்படி இருந்தால், கடைசி பெஞ்ச் மாணவிகளின் நிலை என்ன?” என்று கூறி ஆசிரியர்களையும் கேள்வி கேட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, மாணவிகளிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் செயலாக இருப்பதாக கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை குறித்து எக்ஸ் தளத்தில் உருக்கமாக விளக்கமளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, தான் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்து வளர்ந்தவள் என்றும், மாணவியை கேலி செய்ததாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் கூறியுள்ளார். கார்ப்பரேட் உலகிற்குள் நுழைந்தபோது ஆங்கிலம் தெரியாமல் தானும் தடுமாறி, கற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், அரசுப் பள்ளி மற்றும் தமிழ் வழி மாணவர்கள் உலக மேடையில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்கான சூழலை உருவாக்குவதே தனது நோக்கம் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தன்னை இணையத்தில் கேலி செய்யும் அரசியல்வாதிகள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசுப் பள்ளியில் படித்து இன்று தான் இந்த உயரிய இடத்தில் நிற்பதே விமர்சனங்களுக்கான பதில் என்றும் நெத்தியடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
