மகாராஷ்டிர மாநிலம் நாஷிக் மாவட்டம் மன்மாட் நகரில், சில்லறை போக்குவரத்து தகராறு காரணமாக இருசக்கர வாகன ஓட்டியை கார் ஓட்டுநர் ஒருவர் கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சோப்டா பெட்ரோல் பங்க் அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று, இர்பாத் பெக் என்ற இளைஞரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதுவது போல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இர்பாத், காரை வழிமறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் லட்சுமிகாந்த் ஷேஜ்வால், உடனடியாகத் தன் காரில் இருந்த கத்தியை எடுத்து இர்பாத்தின் வயிற்றில் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்த கொலை வெறி தாக்குதலுக்குப் பிறகு, குற்றவாளி லட்சுமிகாந்த் தனது காரில் யேவ்லா பகுதியை நோக்கி அதிவேகமாக தப்பிச் சென்றார். தகவலறிந்த மன்மாட் காவல்துறை உடனடியாக மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையை மேற்கொண்டனர். காவல்துறையினர் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் அந்த காரைத் துரத்திச் சென்று மறிக்க முயன்றபோது, லட்சுமிகாந்த் காரை நிறுத்தாமல் அங்கிருந்த காவலர்கள் மீதே ஏற்றி நசுக்க முயன்றுள்ளார். எனினும், காவலர்கள் சமயோசிதமாக விலகி தப்பித்து, காரைச் சுற்றி வளைத்து அவரைக் கைது செய்தனர்.
கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த இர்பாத் பெக் என்ற இளைஞர், தற்போது மாலேகானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் குற்றவாளியின் காரைப் பறிமுதல் செய்து, அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
