“பழிக்கு பழி… டிரம்பை கொல்வது எங்கள் பொறுப்பு”… கமேனியின் இறுதிச்சடங்கில் நடுங்க வைத்த சிவப்பு கொடிகள்…. பதறும் உலக நாடுகள்..!

By Nanthini on ஆடி 6, 2026

Spread the love

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு, பல்வேறு அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்றது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தீவிர போர்ச் சூழல் காரணமாக சுமார் நான்கு மாதங்களுக்கும் மேலாக தாமதமான இந்த இறுதி நிகழ்வில், ஈரானின் அரசியல் மற்றும் ராணுவ உயர்மட்ட தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா தொழுகை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரவு முதலே திரண்டு தங்களின் இரங்கலை செலுத்தினர்.

இந்த இறுதிச் சடங்கின் போது, அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்கள் ஈரான் தேசிய கொடிகளையும், பழிவாங்கலைக் குறிக்கும் சிவப்பு கொடிகளையும் ஏந்தி அலி கமேனியின் மறைவுக்கு ஆவேசமாக நீதி கோரினர். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் “அமெரிக்காவுக்கு மரணம்”, “இஸ்ரேலுக்கு மரணம்” என்ற கோஷங்களை எழுப்பியதோடு, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை கொல்ல வேண்டும் என முழக்கமிட்டனர். மேலும், டிரம்ப் மற்றும் நெதன்யாகுவை குறிவைக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் பில் போர்டுகளும் அங்கு வைக்கப்பட்டிருந்தது அங்குள்ள பதற்ற நிலையை வெளிப்படுத்தியது.

   

இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கவிஞர் முகமது ரசூலி, “கமேனியின் ரத்தத்தின் மீது சத்தியமாகச் சொல்கிறேன், டிரம்பை கொல்வது எங்கள் பொறுப்பு” என்று பகிரங்கமாக முழங்கி சர்ச்சையை ஏற்படுத்தினார். அமெரிக்காவின் தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறப்படும் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றாலும், அவரது சகோதரர்கள், அதிபர் மசூத் பெசெஷ்கியான், சபாநாயகர் முகமது பகர் காலிபாஃப் மற்றும் புரட்சிகர காவல் படையின் தலைவர் அகமது வாஹிதி போன்ற முக்கிய தலைவர்கள் பொதுவெளியில் ஒன்றாகத் தோன்றி ஈரானின் ஒற்றுமையை பறைசாற்றினர். 97 வயதான ஷியா மதகுரு ஆயத்துல்லா ஜாஃபர் சோபானி தலைமையில் கமேனி மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்களுக்கு இறுதித் தொழுகை நடத்தப்பட்டது.

   

தெஹ்ரானைத் தொடர்ந்து அலி கமேனியின் உடல் ஈரானின் பல்வேறு நகரங்கள் மற்றும் அண்டை நாடான ஈராக் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, இறுதியாக அவரது சொந்த ஊரான மஷ்ஹாத்தில் உள்ள இமாம் ரேசா தர்காவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தற்போதைய சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக இடைக்கால அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தாலும், நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. இதனால், எல்லையில் இஸ்ரேலின் தொடர் மிரட்டல்களுக்கு மத்தியில் ஈரானில் எழுந்துள்ள இந்த பழிவாங்கும் முழக்கங்கள், சர்வதேச அரங்கில் பெரும் உற்றுநோக்கலையும் புதிய பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.