போலி ‘திருமண ஒப்பந்தம்’… மதம் மாற கட்டாயம்… உத்திரபிரதேசத்தில் அம்பலமான வீட்டு முதலாளியின் கொடூரம்…!

By SATHISH R on ஆடி 6, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பல வருடங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்த வீட்டு முதலாளி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஜலாலுதீன் (24) என்ற அந்த நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் ஏழ்மையையும் அனாதை என்ற நிலையையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வீட்டு வேலைக்காகத் தனது வீட்டிற்கு அழைத்து வந்து இந்தத் துரோகத்தை அரங்கேற்றியுள்ளார். கடந்த சனிக்கிழமையன்று பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஜலாலுதீன் தன்னைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு 17 வயதாக (மைனர்) இருந்தபோது, 20 வயது அடைந்தவுடன் முறைப்படி திருமணம் செய்து கொள்வதாகவும், சொத்தில் பங்கு தருவதாகவும் கூறி 2021 ஆகஸ்ட் 10 அன்று ஒரு போலி ‘எழுத்துப்பூர்வ திருமண ஒப்பந்தம்’ செய்துகொண்டு ஏமாற்றியுள்ளார். மேலும், பெண்ணை பல்வேறு பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதோடு, தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கியுள்ளார்.

   

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோது, அவர் தனது மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அதற்கு அப்பெண் மறுப்புத் தெரிவித்ததால், அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தற்போதைய நிலவரப்படி குற்றம் சாட்டப்பட்ட ஜலாலுதீன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய தீவிரமாக முயற்சி செய்து வருவதை அறிந்த பின்னரே, பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக காவல் நிலையத்தை நாடியுள்ளார்.

   

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து ராஸ்ரா வட்டார காவல்துறை அதிகாரி (சிஓ) ரஜ்னிஷ் கூறுகையில், ஜலாலுதீன் மீது பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் மற்றும் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். தற்போது பல்லியா உள்ளூர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அதிகாரப்பூர்வ வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குற்றவாளியைக் கைது செய்ய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.