மனைவியின் அந்த ஒரு பழக்கம்… கோபத்தில் கணவன் செய்த விபரீதம்… : 12 நாட்கள் மறைந்திருந்த அதிர்ச்சி உண்மை… கணவன் வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்…!

By SATHISH R on ஆடி 6, 2026

Spread the love

கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் ஆடைகள் ஏதுமின்றி மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மதுக்கரை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்பத்தில் பெண்ணின் அடையாளம் தெரியாததாலும், உடல் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டதாலும் பெரும் மர்மம் நீடித்தது. குற்றவாளிகளை விரைந்து கண்டறிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.

தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் நடத்தப்பட்ட தீவிர தகவல் சேகரிப்பின் பலனாக, சுமார் 12 நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வர்ஷா (25) என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனது கணவர் ஜெகன் பிரதானுடன் கோவைக்கு வந்து தங்கி, பல்வேறு கட்டுமானப் பணிகளில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. வர்ஷாவின் மரணத்திற்குப் பிறகு அவரது கணவர் திடீரென மாயமாகி இருந்ததால், அவர் மீதான சந்தேகம் வலுத்தது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, ஒடிசாவில் பதுங்கியிருந்த ஜெகன் பிரதானை அதிரடியாகக் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.

   

போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், வர்ஷா அடிக்கடி வேறு ஆண்களுடன் செல்போனில் பேசி வந்ததாக ஜெகன் சந்தேகமடைந்ததும், இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. சம்பவத்தன்றும் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த ஜெகன் தன் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ஆரம்பத்தில் சந்தேக மரணமாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. சடலத்தைக் காட்டுப்பகுதிக்கு எப்படிக் கொண்டு சென்றார் என்பது குறித்து ஜெகனிடம் மதுக்கரை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.