தேனி வட்டாரத்திலும் சென்னை அறிவாலய வட்டாரத்திலும் தற்போதைக்கு பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய விஷயம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதுதான். அதிமுகவிலிருந்து விலகி, கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திடீரென திமுகவில் இணைந்த ஓபிஎஸ், தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஆனால், கட்சியில் சேர்ந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், தனக்கு இதுவரை எந்தவொரு கட்சிப் பொறுப்போ அல்லது நிர்வாகப் பொறுப்போ வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது மகனுக்கும் பதவி கேட்டு திமுக தலைமையை அணுகியபோது, “கொஞ்ச காலம் பொறுத்திருங்கள்” என கைவிரித்ததால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை தங்களது கட்சிக்கு இழுக்கும் மறைமுகப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தவெக தற்போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. கட்சியில் விஜய் மட்டுமே முக்கிய முகமாக இருக்கும் நிலையில், மாவட்ட அளவில் இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்க பனையூர் வட்டாரம் திட்டமிட்டுள்ளது. இதற்காக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை வளைக்கும் பணியில் இறங்கியுள்ள தவெக, குறிப்பாக தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க சீனியரான ஓபிஎஸ்ஸை குறிவைத்துப் பேசி வருகிறது.
தற்போது தமிழக வெற்றிக் கழகமானது ஒரு ‘மினி அதிமுக’ போல மாறி வருகிறது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே கரூர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட ஆறு அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். மேலும், தேர்தலுக்கு முன்னரே தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தற்போது விஜய்யின் அமைச்சரவையில் சிட்டிங் அமைச்சராக இருக்கிறார். இவர்களைப் போல இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றால் தங்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆவலில் பல முக்கிய தலைவர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சூழலில், ஓபிஎஸ் தவெகவில் இணைந்தால் அவருக்கு செங்கோட்டையனைப் போல கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியோ அல்லது மாவட்டச் செயலாளர் பதவியோ வழங்கப்படும் என்றும், இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் அமைச்சர் பதவிகூட தரப்படும் என்றும் தவெக தரப்பில் தூது விடப்பட்டுள்ளது. ஓபிஎஸ்ஸை விட அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தவெகவில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், அவருக்கும் உரிய பதவி தருவதாக பனையூர் வட்டாரம் உறுதி அளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அதிரடி அரசியல் நகர்வுகளின் உண்மைத் தன்மை மற்றும் ஓபிஎஸ்-இன் இறுதி முடிவு என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வமான பதில் விரைவில் தேனி வட்டாரத்தில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
