தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ஜீவப்பிரியா (வயது 22) என்ற இளம்பெண், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஹெச்.சி.எல். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் அப்பகுதியில் உள்ள கிருஷ்ணா பெண்கள் விடுதியில் தங்கி வேலை செய்து வந்த நிலையில், இரவு பணி முடிந்து விடுதிக்குத் திரும்பியுள்ளார். நள்ளிரவு சுமார் 11.15 மணியளவில் தனது ஆண் நண்பரான சந்தோஷ் என்பவருடன் செல்போனில் பேசிக்கொண்டே விடுதியின் மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான தனிப்பட்ட வாக்குவாதம் காரணமாக, நள்ளிரவு 12.30 மணியளவில் தான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறிவிட்டு ஜீவப்பிரியா அழைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ், உடனடியாக ஜீவப்பிரியாவின் தோழியான சஞ்சுஸ்ரீக்குத் தகவல் கொடுத்துள்ளார். சஞ்சுஸ்ரீ விரைந்து சென்று பார்த்தபோது, ஜீவப்பிரியா மாடியிலிருந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு, அந்த வழியாக வந்த செம்மஞ்சேரி ரோந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜீவப்பிரியாவை மீட்க முயன்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதலருடன் ஏற்பட்ட வாக்குவாதம் தான் தற்கொலைக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
