பளார்.. பளார்..! எழும்பூர் ரயில் நிலையத்தில் டிடிஆர் கன்னத்தில் அறைந்த சட்டக் கல்லூரி மாணவி…. பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்களுக்கும் (TTR) சட்டக் கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர் வந்திறங்கிய அந்த மாணவியிடம், அங்கு பணியில் இருந்த பெண் டிக்கெட் பரிசோதகர்கள் பயணச்சீட்டு கேட்டுள்ளனர். தான் உறவினரை வழியனுப்ப மட்டுமே வந்ததாக மாணவி கூற, பிளாட்பார்ம் டிக்கெட்டும் இல்லாததால் அவர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு விசாரணையின் போது மாணவியின் மொபைல் போனை டிக்கெட் பரிசோதகர் வாங்கி வைத்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த மாணவி பரிசோதகரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான கைகலப்பு உருவாகி, தற்போது எழும்பூர் ரயில்வே போலீஸார் இருதரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அண்மைக்காலமாகவே ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கும் டிக்கெட் பரிசோதகர்களுக்கும் இடையே இது போன்ற மோதல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜோதி லிங்கம் என்ற டிடிஆர் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுடன் மேல் படுக்கையில் அமர்ந்திருந்த ஒடிசாவைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மது போதையில் இருந்த அந்த நபர் டிடிஆரை கடுமையாகத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அந்தப் பயணியை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

   

பயணிகள் மட்டுமின்றி, சில நேரங்களில் ரயில்வே ஊழியர்களின் அத்துமீறிய அராஜகப் போக்கும் இத்தகைய மோதல்களுக்குக் காரணமாக அமைகிறது. கடந்த ஜூன் மாதம் ஆந்திராவின் சித்தூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தனது காலணியைக் கழற்றி பயணியைத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் உடனடியாக அந்த ஊழியரை பணிநீக்கம் செய்து கடுமையான நடவடிக்கை எடுத்தது.

   

அதேபோல, கேரளா சென்ற ஒரு ரயிலில் மாற்றுத்திறனாளி பயணி ஒருவரை, டிக்கெட் கேட்கும் விவகாரத்தில் மது போதையில் இருந்த ஒரு டிடிஆர் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய நெஞ்சை பதறவைக்கும் சம்பவமும் அரங்கேறியது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து சம்பந்தப்பட்ட டிடிஇ உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். கடமையைச் செய்ய வேண்டிய அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையும், விதிகளுக்குக் கட்டுப்பட மறுக்கும் சில பயணிகளின் ஆக்ரோஷமான போக்கும் ரயில் பயணங்களை அச்சம் நிறைந்ததாக மாற்றி வருகின்றன. இத்தகைய வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க இருதரப்பிலும் உரிய விழிப்புணர்வும், சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும் அவசியமாகின்றன.