நெஞ்சை பதறவைக்கும் விபத்து… 11 வயது சிறுவன் செய்த காரியம்… 8 துறவிகள் துடிதுடிக்க மரணம்… சாலையில் நடந்து சென்ற துறவிகளுக்கு காத்திருந்த கோர முடிவு…!

By Visaka on ஆடி 4, 2026

Spread the love

தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 35 புத்த துறவிகள், தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் நேற்று புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. அவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 11 வயது சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த டிரக் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து துறவிகளின் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தில் 5 துறவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பல துறவிகள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த கொடூர விபத்தில் பலியான துறவிகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மேலும் 14 துறவிகளுக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாகாண ஆளுநர் வொராயன் பூன்னாரத் தெரிவித்துள்ளார். விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய துறவி ஒருவர் கூறுகையில், “அந்த வாகனம் திடீரென நிலைதடுமாறி, சாலையில் இருந்து விலகி வந்து எங்கள் கூட்டத்தின் மீது வேகமாக மோதியது” என்று அந்த நடுக்கமூட்டும் தருணத்தை விவரித்தார். இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திய 11 வயது சிறுவனை உள்ளூர் காவல்துறையினர் கைது செய்து தங்களது காவலில் வைத்துள்ளனர். இவ்வளவு சிறிய வயது சிறுவன் எப்படி டிரக் வாகனத்தை இயக்கினான் மற்றும் விபத்து நடந்ததற்கான பின்னணி என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.