அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வந்த சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலரை இஸ்ரேலின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து அமெரிக்காவே முன்வந்து காப்பாற்றியுள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி பல மாதங்களாக நீடித்த இந்த மோதலால், ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நெருக்கடிகள் ஏற்பட்டன. போரை முடிவுக்குக் கொண்டு வர தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், அமெரிக்காவின் இந்த ரகசிய எச்சரிக்கை நடவடிக்கை உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஈரான் சார்பில் அனுப்பப்பட்ட அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோரை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடைபெற்ற மிக முக்கியமான தற்காலிக போர்நிறுத்த பேச்சுவார்த்தையின் போது, இஸ்ரேலின் இந்த சதித்திட்டம் அமெரிக்க உளவுத்துறைக்கு தெரியவந்தது. உடனடியாகச் செயல்பட்ட அமெரிக்கா, வளைகுடாவில் உள்ள தனது நட்பு நாடுகள் மூலமாக ஈரானுக்கு ரகசியமாக எச்சரிக்கை விடுத்து, அந்த இரு தலைவர்களின் உயிரையும் காப்பாற்றியுள்ளதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதில் இருந்தே, ஈரானின் மூத்த தலைவர்களைக் குறிவைப்பதே இஸ்ரேலின் முக்கிய வேலையாக இருந்தது. ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி வரை, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஈரான் தலைவர்களை இஸ்ரேல் படைகள் கொன்று குவித்துள்ளன. சொல்லப்போனால், ஆரம்பத்தில் அமெரிக்க உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் தான் இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை நடத்தி வந்தது. அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த விரும்பிய மிதவாத தலைவர்களான அலி லாரிஜானி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல் கராசி போன்றோர் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட போது கூட அமெரிக்கா அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இறுதி கட்ட அமைதி ஒப்பந்தம் நெருங்கும் வேளையில் அரக்சியும் காலிபாப்பும் கொல்லப்பட்டால், அது பிராந்தியத்தில் மீண்டும் ஒரு கடுமையான போருக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கா அஞ்சியது. ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவது, ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவது போன்ற மிக முக்கியமான விஷயங்களுக்கு ஈரானின் முதன்மை பிரதிநிதிகளாக இவர்கள் இருவருமே இருந்தனர். இவர்கள் இஸ்ரேலின் ‘ஹிட் லிஸ்டில்’ இருப்பதை அறிந்த அமெரிக்க அதிகாரிகள், அமைதி முயற்சிகள் முற்றிலும் சீர்குலைந்துவிடக் கூடாது என்ற சுயநல நோக்கத்திற்காகவே, உடனடியாக ஈரானை அலர்ட் செய்து அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
