“நீ செத்துப்போ.. எனக்கு அவன் தான் வேணும்”… கஞ்சா வியாபாரிக் காதலனுடன் சென்ற மகள்… ஒரே ஒரு வார்த்தையால் தாய் எடுத்த விபரீத முடிவு….!

By Nanthini on ஆடி 3, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, “நீ செத்துப்போ” என்று கூறிவிட்டு வீட்டை விட்டு ஓடிய மகளால், மனமுடைந்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அம்மாபேட்டை ஆனந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி மோகன் – கோசலை (45) தம்பதியினரின் மகள் திவ்யா (23) என்பவர், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, கோழி வளர்ப்பதற்காக இடம் கேட்டு வந்த மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (26) என்பவருடன் திவ்யாவிற்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் தீவிரக் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், கதிர்வேல் குறித்து திவ்யாவின் பெற்றோர் ரகசியமாக விசாரித்தபோது, அவர் ஒரு கஞ்சா வியாபாரி என்பதும், அவர் மீது ஏற்கனவே பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், “அவன் கஞ்சா விற்பவன், அவனோடு வாழ முடியாது” என்று கூறி திவ்யாவின் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், பெற்றோரின் எச்சரிக்கையையும் மீறி திவ்யா அந்த கஞ்சா ஆசாமியுடனான தொடர்பைத் தொடரவே செய்துள்ளார்.

   

கடந்த 1-ஆம் தேதி மாலை, கதிர்வேல் திவ்யாவின் வீட்டிற்குச் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அழைக்க, திவ்யாவும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது அவரது தாய் கோசலை ஓடிவந்து மகளைத் தடுத்து, “நீ அவனுடன் சென்றால் நான் தற்கொலை செய்து செத்துவிடுவேன்” என அழுதுகொண்டே மிரட்டியுள்ளார். ஆனால், காதலின் உச்சிக்குச் சென்ற திவ்யா, பெற்ற தாய் என்றும் பாராமல், “நீ தற்கொலை செய்து செத்துப்போ” எனக் கொடூரமாகக் கூறிவிட்டு, தாயைக் கீழே தள்ளிவிட்டுவிட்டுத் தனது காதலனுடன் பைக்கில் ஏறித் தப்பிச் சென்றுள்ளார். இதனால் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் முன்னிலையிலும் அவமானப்பட்டு, மகளின் நடத்தையால் கடும் மனமுடைந்த தாய் கோசலை, வீட்டிற்குள் சென்று தனது சேலையாலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

   

இச்சம்பவம் குறித்து கோசலையின் மகன் அளித்த புகாரின் பேரில், அம்மாபேட்டை போலீசார் திவ்யா மற்றும் அவரது காதலன் கதிர்வேல் ஆகிய இருவர் மீதும் ‘தற்கொலைக்குத் தூண்டுதல்’ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். நேற்று காலை, ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ரகசியமாகத் திருமணம் செய்ய முயன்ற இந்த ஜோடியைப் போலீசார் அதிரடியாகச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். மணக்கோலத்தில் சிக்கிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்ட பின், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுத் தற்பொழுது கோவை மற்றும் சேலம் மத்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.