தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் கைது நடவடிக்கை, தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. முதலமைச்சர் விஜய் குறித்து பொதுமேடையில் அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சித்த புகாரில் இந்த அதிரடி நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த 90 நிமிடங்களிலேயே, காவல்துறையினர் அவரைத் தேடிச் சென்று கைது செய்திருப்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக அவதூறு வழக்குகளில் கடந்த காலங்களில் இவ்வளவு விரைவாகப் பெரிய அளவிலான கைது நடவடிக்கைகள் பாய்ந்ததில்லை என்ற பேச்சு நிலவுகிறது. ஆனால், இந்த முறை அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டே ஆக வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் மிக உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம், முதலமைச்சர் விஜய் மற்றும் ஒரு நடிகையை இணைத்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய விதம் முதலமைச்சரை கடும் உஷ்ணமடையச் செய்ததே ஆகும். இதன் விளைவாக, தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மூலம் உடனடியாகப் புகார் அளிக்கப்பட்டு, மின்னல் வேகத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தக் கைதின் பின்னணியில் மற்றொரு முக்கியக் காரணியாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீதான அனிதா ராதாகிருஷ்ணனின் நேரடித் தாக்குதலும் பார்க்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை ஒருமையில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “முடிந்தால் உன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திருச்செந்தூரில் என்னை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா?” என சவால் விடுத்திருந்தார். அதோடு நிறுத்தாமல், தமிழ்நாட்டில் ஆதவ் அர்ஜூனா லாட்டரி சீட்டு விற்று கொள்ளையடிக்க நினைக்கிறார் என்றும் காட்டமாக விமர்சித்திருந்தார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஆதவ் அர்ஜூனா, அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்ய வேண்டும் என்பதில் விடாப்படியாக இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அது தள்ளுபடியாகப் போகிறது என்பதை முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் முன்கூட்டியே கணித்துத் தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளனர். மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, முதல்வர் அலுவலகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைத் (SP) தொலைபேசியில் தொடர்புகொண்டு அனிதா ராதாகிருஷ்ணனை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த ஒட்டுமொத்த அதிரடி ஆக்ஷன்களும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் கண் அசைவிலேயே அரங்கேறியதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஊட்டியுள்ளன.
