அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஏறி சாகசம் செய்த இளஞ்ஜோடியின் செயல் தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த இவான் குஸ்நெட்சோவ் (32), ஏஞ்சலினா நிகோலாவ் (33) ஆகிய இந்த ஜோடி, எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 103-வது மாடியில் உள்ள பராமரிப்பு கதவு வழியாக ரகசியமாக நுழைந்துள்ளனர். பலத்த காற்று வீசிய நிலையிலும், 1,454 அடி உயரமுள்ள அந்த கோபுரத்தின் நூலிழை முனையைப் பிடித்துக் கொண்டு, இவான் தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து திருமணக் காதலை வெளிப்படுத்தியதோடு, “அன்பின் சக்தி வெல்லும்போது இந்த உலகம் அமைதியைக் காணும்” என்ற வாசகம் அடங்கிய கருப்பு நிற பேனரையும் விரித்துக் காட்டியுள்ளனர்.
கீழே இருந்து இவர்களின் இந்த ஆபத்தான சாகசத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த நியூயார்க் போலீசார், கட்டிடத்தின் உச்சிக்குச் சென்று அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டு, அத்துமீறி நுழைதல் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். உலகெங்கிலும் உள்ள மிக உயரமான கட்டிடங்கள் மீது எவ்வித பாதுகாப்பும் இன்றி ஏறி சாகசம் செய்வதையே வழக்கமாகக்கொண்ட இந்த ஜோடி, பின்னர் மான்ஹாட்டன் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த இந்த ஜோடியிடம் செய்தியாளர்கள், “நீங்கள் இப்போது முத்தமிட விரும்புகிறீர்களா?” என்று கேட்க, சற்றும் யோசிக்காமல் அவர்கள் அங்கேயே ஒருவருக்கொருவர் முத்த மழை பொழிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ட்ரெண்டிங் ஆக வேண்டும் என்பதற்காகவும், தங்களின் காதலை உலகிற்கு அறிவிக்கவும் உயிரைப் பணயம் வைத்து இந்த ஜோடி செய்த சாகசமும், அதைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே அவர்கள் செய்த செயலும் அடங்கிய வீடியோ தற்போது இணையவாசிகளை வாயடைக்க வைத்து, சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
