நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் விடுமுறைக்காகத் தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, மீண்டும் கல்லூரிக்குத் திரும்புவதற்காகச் சென்னையிலிருந்து ஊட்டிக்கு தனியார் ஆம்னி பஸ்ஸில் இரவு நேரத்தில் பயணம் செய்துள்ளார். அதிகாலை நேரத்தில் பஸ் நீலகிரி மாவட்ட எல்லைக்குள் நுழைந்து ஊட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மேல் படுக்கையில் (ஸ்லீப்பர் பெர்த்) தூங்கிக் கொண்டிருந்த அந்த மாணவிக்கு, இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு மர்ம நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து திடுக்கிட்டு விழித்த மாணவி அலறித் துடித்துள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு பஸ்ஸில் இருந்த சக பயணிகள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு எழுந்தனர். ஆனால், அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து நழுவித் தப்பியோடிவிட்டார். இருட்டாக இருந்ததால் உடனடியாக அந்த நபர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், தனக்குத் தொல்லை கொடுத்த நபர் வெள்ளை நிறச் சட்டை அணிந்திருந்தார் என்பதை அந்த மாணவி துல்லியமாகக் காவல்துறைக்கு அடையாளம் காட்டினார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து உடனடியாகப் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்த அடுத்த கணமே, நீலகிரி மாவட்டத்தின் “சிங்கப்பெண் அதிரடிப்படை” போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரோனியா மற்றும் பெண் போலீசார் வீனா, சவிதா ஆகியோர் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பஸ்ஸை நிறுத்தி, அங்குள்ளவர்களிடம் அதிரடி விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் முடிவில், அந்த ஆம்னி பஸ்ஸில் மாற்று ஓட்டுநராக வந்த மதுரையைச் சேர்ந்த கார்த்திகேயன் (40) என்பவர்தான் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார் என்பது அம்பலமானது. மாணவி சொன்னபடியே அவர் வெள்ளை நிற உடையும் அணிந்திருந்தார். இதையடுத்து, சிங்கப்பெண் படையினர் கார்த்திகேயனைக் கைது செய்து ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த இந்தத் துயர சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளியை உடனடியாகப் பிடித்த சிங்கப்பெண் அதிரடிப்படையினரின் அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதுமே பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவே இந்தச் சிறப்புப் படை செயல்பட்டு வருகிறது. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு நேரிடும் குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை உள்ளிட்ட எந்தவித அச்சுறுத்தலுக்கும் தயக்கமின்றி 1091 அல்லது 112 ஆகிய அவசர உதவி எண்களைத் தொடர்பு கொண்டு காவல்துறையின் உடனடி உதவியைப் பெறலாம் என அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
