போலீஸ் காரையே அடித்து நொறுக்கிய ‘ஜிக்-ஜாக்’ பைக் கும்பல்… நள்ளிரவில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By SATHISH R on ஆடி 3, 2026

Spread the love

நாக்பூரில் நள்ளிரவு நேரத்தில் அத்துமீறி பைக்குகளை தாறுமாறாக ஓட்டிச் சென்ற ஒரு கும்பல், தன் காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போக்குவரத்து காவலர் குணால் சிங் என்பவரை வழிமறித்து கொடூரமாகத் தாக்கியுள்ளது. மாங்காபூர் சாலை பகுதியில் பைக்குகளில் ஆபத்தான முறையில் ‘ஜிக்-ஜாக்’ பாணியில் சென்ற அந்த கும்பலை எச்சரிப்பதற்காகக் காவலர் ஹார்ன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பைக் கும்பல், காவலரின் காரை முந்திச் சென்று மறித்ததோடு, கற்களை வீசி காரின் கண்ணாடிகளையும் காரின் முன்பகுதியையும் அடித்து நொறுக்கி அட்டூழியம் செய்துள்ளது.

காரை விட்டு கீழே இறங்கிய காவலர் குணால் சிங்கை அந்த கும்பல் சூழ்ந்துகொண்டு, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததோடு கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்படும் வகையில் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாகத் திரண்டு வந்து தடுத்ததால், அந்த பைக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இச்சம்பவம் குறித்து மாங்காபூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பொதுமக்கள் கொடுத்த ஒரு பைக்கின் பதிவு எண் மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, இக்கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

   

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் ஏற்கனவே பல்வேறு குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று மூத்த காவல் ஆய்வாளர் ஹரேஷ் கல்சேகர் தெரிவித்துள்ளார். நாக்பூரின் முக்கிய சாலைகளில், குறிப்பாக மார்ட்டின் நகர் மற்றும் மாங்காபூர் பகுதிகளில், ஒரே பைக்கில் மூன்று பேர் பயணிப்பதும் இரவு நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இதுபோன்ற சாலை வன்முறைகளைத் தடுக்க இரவு நேரக் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.