சமூக வலைத்தளமான ‘X’ தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நெடுஞ்சாலை ஒன்றில் மற்றொரு லாரியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்த திகிலூட்டும் காட்சி பதிவாகியுள்ளது. அதிவேகமாக வந்த ஒரு லாரி, முன்னால் சென்ற வாகனத்தை முந்த (Overtake) முயன்றபோது இந்த ஆபத்தான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லாரி ஓட்டுநர் முந்த முயன்ற அதே நேரத்தில், எதிர்பாராதவிதமாக எதிர்த்திசையிலும் மற்றொரு லாரி வந்துள்ளது. சாதாரண சூழ்நிலையில் எந்தவொரு ஓட்டுநரும் உடனடியாக பிரேக் அடித்து வேகத்தைக் குறைத்திருப்பார், ஆனால் இந்த ஓட்டுநர் பிரேக் போடுவதற்குப் பதிலாக, வந்த வேகத்திலேயே இரு லாரிகளுக்கும் இடையே இருந்த குறுகிய இடைவெளியில் தன் லாரியை நுழைத்துச் செலுத்தினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரியின் சக்கரங்கள் முதலில் இடதுபுறமாகவும், பின்னர் வலதுபுறமாகவும் மாறி மாறி காற்றில் தூக்கியபடி பயங்கரமாக ஆடியது.
நொடிப் பொழுதில் பெரும் விபத்தில் முடிய வேண்டிய இந்தச் சம்பவம், அதிர்ஷ்டவசமாக லாரி கவிழாமல் நேராக நின்றதால் தப்பியது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் அதிர்ச்சியடைந்து, அந்த ஓட்டுநரின் ஆபத்தான ஓட்டுதல் முறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய பொறுப்பற்ற ஓட்டுநர்களால் தான் சாலையில் பல விபத்துகள் ஏற்படுகின்றன என்றும், ஒரு சில நொடி அஜாக்கிரதை ஒருவரின் வாழ்க்கையையே முடித்துவிடும் என்றும் மக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
