தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் தவெக இணைவு விழா வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. எனினும், இந்த இணைப்பிற்குப் பின்னால் ஒரு பெரும் அரசியல் புயல் வீசத் தொடங்கியுள்ளது. தவெகவிற்குப் போதிய பெரும்பான்மை இல்லாதபோது ஓடிவந்து முதலில் ஆதரவளித்த காங்கிரஸிற்கு, கைமாறாக இரண்டு அமைச்சர் பதவிகளையும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவியையும் விஜய் வழங்கியிருந்தார். ஆனால், காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொள்ளுமாறு பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டும், முதலமைச்சர் விஜய் அதை ஒரு காதில் வாங்கி மறு காதில் போட்டுவிட்டார். டெல்லி பயணத்தின்போது குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வழங்கிய அறிவுரைகளையும் மீறி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸிற்கு உரிய அங்கீகாரம் வழங்க விஜய் முடிவெடுத்துள்ளது தற்போது டெல்லி மேலிடத்தை உசுப்பிவிட்டுள்ளது.
எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்காததால், கட்சியில் புதிதாக இணைந்துள்ள சி.விஜயபாஸ்கர் மூலமாக தவெகவிற்கு ‘செக்’ வைக்க மத்திய அரசு ஸ்கெட்ச் போட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சி.விஜயபாஸ்கர் மீது குட்கா நிறுவனத்திடம் மாதம் 14 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது உள்ளிட்ட பல்வேறு பழைய புகார்கள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து, அமலாக்கத்துறை (ED) மூலம் அவர் மீது ரெய்டு நடத்த டெல்லி கணக்கு போட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் சி.விஜயபாஸ்கரை முடக்குவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக விஜய்யையும் தங்களது வழிக்குக் கொண்டு வர முடியும் என மத்திய அரசு திட்டமிடுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுதான் தவெக தனது கட்சியைப் பலப்படுத்தும் பணிகளைத் தீவிரமாக கையில் எடுத்து, அனைத்து மட்டங்களிலும் அரசியல் தெளிவுள்ளவர்களை நியமித்து வருகிறது. இந்தச் சூழலில், மொத்த ஆட்டத்தையும் கலைக்கும் விதமாக டெல்லி எடுக்கவிருக்கும் இந்த அதிரடி மூவ் தவெக தரப்பைக் கலக்கமடையச் செய்துள்ளது. ஏற்கனவே சி.விஜயபாஸ்கர் இணைப்பிற்கு தவெக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த நிகழ்வில் விஜய் நேரடியாகப் பங்கேற்கவில்லை. இருந்தாலும், கட்சியின் வளர்ச்சிக்காக இந்த இணைப்பு அவசியம் என்பதை அவர் உணர்ந்தே இருக்கிறார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், டெல்லியின் இந்த அரசியல் வியூகங்களையும் அமலாக்கத்துறை நடவடிக்கைகளையும் விஜய் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான் தற்போது தமிழக அரசியலின் மிகப்பெரிய கேள்விக்குறியாக உருவெடுத்துள்ளது.
