அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழலற்ற நேர்மையான அரசியலை முன்னெடுப்பதாகக் கூறி தவெக-வைத் தொடங்கிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இருவரையும் கட்சியில் சேர்த்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி சமூக ஊடகங்களில் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளது.
கரூர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில மோசடி வழக்கு உள்ளதை திமுக சுட்டிக்காட்டியுள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்குப் போலிப் பத்திரம் தயாரித்த வழக்கில், அவரது முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவானார். பின்னர் கேரளாவில் பதுங்கியிருந்த அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அவர் அமைச்சராக இருந்த காலத்திலேயே நடைபெற்றதால், இப்படிப்பட்ட நபரை விஜய் தன் கட்சியில் இணைத்திருப்பது முரண்பாடாக உள்ளது என்று திமுக விமர்சித்துள்ளது.
மற்றொரு முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர் மீதான ‘குட்கா ஊழல்’ வழக்கையும் திமுக விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனை செய்ய அதிமுக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடிக்கும் மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டு வரும் இரு முன்னாள் அமைச்சர்களையும் தனது கட்சியில் இணைத்துக் கொண்ட தவெக தலைவர் விஜய்க்கு, இனி ஊழலைப் பற்றிப் பேசுவதற்கோ அல்லது அதற்கு எதிராகக் குரல் எழுப்புவதற்கோ என்ன தார்மீக உரிமை அல்லது யோக்கியதை இருக்கிறது என்று திமுக காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. இவர்களின் இணைப்பானது ஊழலுக்கு எதிரான விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டின் மீது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தையும் விமர்சனத்தையும் உருவாக்கியுள்ளது.
