உன்னை கொல்லாமல் விடமாட்டேன்… கார் கதவை திறந்து குதித்த இளம் பெண்… சில நொடிகளில் வெடித்து சிதறிய கார்…!

By SATHISH R on ஆடி 1, 2026

Spread the love

பெங்களூருவைச் சேர்ந்த நாகேந்திரா 30 என்பவரும், 23 வயதுடைய அறுவை சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநரான இளம் பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் பெண் நாகேந்திராவை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த நாகேந்திரா, தன்னை விட்டுப் பிரிந்த முன்னாள் காதலியைப் பழிவாங்க ஒரு கொடூரமான கொலைத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

திட்டத்தின்படி, நேற்று அந்தப் பெண் தங்கியிருந்த வாடகை வீட்டிற்குச் சென்ற நாகேந்திரா, அவரை மிரட்டி வலுக்கட்டாயமாக ஒரு காரில் கடத்திச் சென்றுள்ளார். இதற்கிடையில், மகளைக் காணாமல் பதற்றமடைந்த பெண்ணின் பெற்றோர் ஜெயநகர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர். காரில் கடத்திச் செல்லும் போதே நாகேந்திரா அப்பெண்ணுக்குக் கடுமையான கொலை மிரட்டல் விடுத்ததோடு, “உன்னைக் கொலை செய்யாமல் விடமாட்டேன், காரில் ஏற்கனவே வெடிகுண்டு வைத்துள்ளேன்” என்று கூறி ஆயுதங்களைக் காட்டி அவரைத் தாக்கியுள்ளார்.

   

கார் துமகூருவின் ஜோகிஹள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது, இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியதில், நாகேந்திரா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். காரின் பின் இருக்கையில் நடந்த இந்த பயங்கர மோதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், காரைச் சாலையோரம் நிறுத்தியுள்ளார். இந்தச் சாதகமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண், காயங்களுடன் காரின் கதவைத் திறந்து வெளியில் குதித்து தப்பியுள்ளார்; ஆபத்தை உணர்ந்த ஓட்டுநரும் காரில் இருந்து கீழே குதித்து ஓடியுள்ளார்.

   

அவர்கள் குதித்த சில நிமிடங்களிலேயே, காரில் நாகேந்திரா மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் காரின் உள்ளே இருந்த நாகேந்திரா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கல்லம்பெல்லா பிரிவு போலீசார், படுகாயமடைந்த ஓட்டுநரையும், காரில் இருந்து குதித்துக் காயமடைந்த பெண்ணையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். காதலியை அழிக்க நினைத்தவன், தான் வைத்த குண்டிலேயே தானே அழிந்த இந்தச் சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.