அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி இரு நாடுகளும் தங்களின் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திவிட்டு, சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல் போக்குவரத்துக்குத் திறக்க முடிவு செய்திருந்தன. ஆனால், இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட சில நாட்களிலேயே, சிங்கப்பூர் நாட்டு சரக்குக் கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்றபோது ஈரான் அதன் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. தங்களின் வழிகாட்டுதலின்படி, ஈரான் கடலோரப் பகுதி வழியாகத்தான் கப்பல்கள் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி ஈரான் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
ஈரானின் இந்த ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவமும் உடனடியாகக் களத்தில் இறங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஈரானின் ஏவுகணை தளங்கள், ட்ரோன் மையங்கள் மற்றும் கடலோர ரேடார் தளங்கள் உள்ளிட்ட 10 முக்கிய ராணுவ இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளன. அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும் இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கி வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகப் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீண்டும் மீறியதாலேயே அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஈரான் தொடர்ந்து இவ்வாறு நடந்துகொண்டால் அமெரிக்கா பொறுமையாக இருக்காது என்று கூறியுள்ளார். மேலும், ஏற்கனவே தொடங்கிய ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா முழுமையாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், உலக வரைபடத்தில் “ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும்” என்றும் மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர் எச்சரித்துள்ளார்.
