திரையிசை உலகில் பல தசாப்தங்களாகத் தன் இசையால் ராஜ்யம் நடத்தி வரும் இசைஞானி இளையராஜாவுக்கு, காப்புரிமை வழக்கில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’, ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு அவர் உரிமை கோர முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம், பிரபல இசை நிறுவனமான ‘சரிகம’வுக்கு சாதகமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இளையராஜாவின் இசையில் 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் வெளியான இந்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கான காப்புரிமை அந்தந்தப் படத் தயாரிப்பாளர்களுடனான ஒப்பந்தங்கள் மூலம் தங்களுக்கே சொந்தம் என்று ‘சரிகம இந்தியா லிமிடெட்’ நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. ஆனால், இந்த பாடல்களை இளையராஜா அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோ சாவன் போன்ற சர்வதேச டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றி வருவாய் ஈட்ட முயன்றதை எதிர்த்தே சரிகம நிறுவனம் இந்த சட்டப் போராட்டத்தைக் கையில் எடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துஷார் ராவ் கெடேலா, இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1957-ன் படி ஒரு தயாரிப்பாளர் இசையமைப்பாளருக்கு உரிய ஊதியம் வழங்கி இசையை உருவாக்கச் சொல்லும்போது, அந்தப் படைப்பின் முதல் உரிமையாளர் தயாரிப்பாளரே ஆவார் என்ற சரிகம தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்டார். தயாரிப்பாளர்கள் தங்களுக்கிருந்த அந்த சட்டப்பூர்வ உரிமையை சரிகம நிறுவனத்திற்கு முறைப்படி மாற்றிக் கொடுத்துள்ளதால், அதன் மீது இளையராஜா தனிப்பட்ட முறையில் வணிக ரீதியாக உரிமை கொண்டாட முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் ‘மூடுபனி’, ‘நிழல்கள்’, ‘ராஜ பார்வை’, ‘கல்யாணராமன்’ போன்ற இளையராஜாவின் எக்காலத்திற்குமான ஆகச்சிறந்த இசைப் பொக்கிஷங்கள் இந்தத் தடையின் கீழ் வந்துள்ளன. இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு இறுதி நிலையை எட்டும் வரை இந்த 134 படங்களின் பாடல்களை அவர் வணிக ரீதியாகப் பயன்படுத்தவோ அல்லது டிஜிட்டல் தளங்கள் மூலம் வருவாய் ஈட்டவோ முடியாது என்பது அவரது ரசிகர்களுக்கும் இசை வட்டாரத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
