ஒரே ஒரு புகார்… 20 இடங்களில் ரெய்டு… மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சம்மன்… திமுக வட்டாரத்தில் திடீர் பதற்றம் ஏன்…!

By SATHISH R on ஆடி 1, 2026

Spread the love

திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களுமான எ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மற்றும் சில மாவட்டங்களில், நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணிகள் ஏதும் செய்யாமலேயே பொதுப் பணத்தைக் கையாடல் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில், எ.வ. வேலு உட்பட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை அண்மையில் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022-ஆம் ஆண்டில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக எ.வ. வேலு இருந்தபோது, சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு, எந்தவொரு வேலையையும் செய்யாமலேயே தனியார் நிறுவனத்திற்கு 3.23 கோடி ரூபாய் அரசுப் பணம் விடுவிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த கூட்டுச் சதி மூலம் அரசுப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

   

இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 25-ஆம் தேதி சென்னை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். எ.வ. வேலுவின் இல்லங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள் எனப் பரவலாக நடத்தப்பட்ட இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத 40 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்தது. எனினும், தனது இடங்களில் பணம் எதுவும் சிக்கவில்லை என்று எ.வ. வேலு உடனடியாக மறுப்புத் தெரிவித்தார்.

   

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அடுத்தகட்ட விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு எ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விசாரணையின் போது முக்கியத் தகவல்கள் வெளிவரலாம் என்றும், சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாயலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் திமுக வட்டாரத்தில் பெரும் பதற்றமும் பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.