அதிமுகவில் நாளுக்கு நாள் அரசியல் திருப்பங்கள் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். நேற்று தனது கரூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அவர், இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கடிதத்தில், “திமுகவுடன் கைகோர்க்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) முயற்சித்தது எனது நெஞ்சில் ஈட்டி போல் பாய்ந்தது; ‘தீயசக்தி’ என்று நம்மால் வர்ணிக்கப்படும் திமுகவுடன் இணைய தன்னிச்சையாக முடிவெடுத்ததே கட்சியின் அழிவுக்கு வழிவகுத்துள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கொங்கு மண்டலத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எம்.ஆர். விஜயபாஸ்கரின் இந்த அடுத்தடுத்த அதிரடி முடிவுகள், தமிழக அரசியல் வட்டாரத்திலும் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
