“வீட்டைப் பெருக்குகிறேன், பாத்திரம் விளக்குகிறேன். ஆனாலும் என் மனைவி என்னை அடிக்கிறாள்” என்று இன்ஸ்டாகிராமில் உருக்கமான வாக்குமூல வீடியோவை பதிவிட்டுவிட்டு, 28 வயதான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குர்கானைச் சேர்ந்த ஆடை வியாபாரியான ராகுல் என்பவரே, ஃபரிதாபாத்தின் பல்லப்கர் பகுதியில் உள்ள தனது கடைக்குள் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜோதி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட ராகுலுக்கு, ஆரம்பத்திலிருந்தே குடும்ப வாழ்க்கை நரகமாக மாறியுள்ளது. அவரது மனைவி ஜோதி, மாமியார் வீணா, மாமனார் பிட்டு மற்றும் நாத்தனார் நீது ஆகியோர் தன்னைத் தொடர்ச்சியாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்ததாக ராகுல் தனது மரண வாக்குமூலத்தில் குற்றம் சாட்டியுள்ளார். பெற்றோரைப் பிரிந்து தனியாக வாழ வேண்டும் என்று மனைவி வற்புறுத்தியதுடன், இரண்டு நாட்களுக்கு முன்பு தன் மீது ஒரு பொய்யான தாக்குதல் வழக்கையும் ஜோதி பதிவு செய்துள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ராகுல், தாங்க முடியாத விரக்தியின் எல்லைக்கே சென்றுள்ளார்.
சம்பவத்தன்று காலை தனது தாயாரைச் சந்தித்துவிட்டு, நான்கு மாதங்களுக்கு முன்புதான் தான் தொடங்கிய புதிய ஆடைக்கடைக்கு ராகுல் சென்றுள்ளார். காலை 11 மணியளவில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர் அமித் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக கடைக்கு விரைந்தனர். கடை உள்ளே பூட்டப்பட்டிருந்ததால் கண்ணாடிக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, ராகுல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த செக்டர் 3 போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது இறுதி வீடியோ பதிவில், “என் மரணத்திற்கு காரணமான என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது சொத்துக்கள் அனைத்தும் என் தாய் மற்றும் உடன்பிறப்புகளுக்கே சேர வேண்டும்” என்று ராகுல் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். ராகுலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரிலும், இன்ஸ்டாகிராம் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும் அவரது மனைவி, மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி அஜித் சிங் கூறுகையில், காவல்துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், வீடியோவில் உள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
