கர்நாடக மாநிலத்தில் தந்தையொருவர் தனது குழந்தையின் உயிரைப் பணயம் வைத்து இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் கடக் நகரில் உள்ள திப்பு சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் இந்தத் துயரம் நடந்துள்ளது. அந்த நபர் தனது குழந்தையை லக்கேஜ் பைக்குள் வைத்து, அதனைத் தனது இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் தொங்கவிட்டபடி அலட்சியமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்த ஆபத்தான பயணத்தின்போது குழந்தையின் தலை மட்டுமே பைக்குள் இருந்து வெளியே தெரிந்துள்ளது. பை அறுந்து விழுந்தாலோ அல்லது குழந்தை தவறி கீழே விழுந்தாலோ உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை இருந்ததால், இதைப் பார்த்த பொதுமக்கள் பலரும் அவரை எச்சரித்துள்ளனர். ஆனால், அந்தத் தந்தை எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார். இந்தச் சம்பவத்தை யாரோ வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது வைரலாகி மக்களிடையே கடும் கண்டனங்களை எழுப்பியது.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் வண்டியின் எண் தெளிவாகத் தெரிந்ததால், போக்குவரத்துத் துறையின் உதவியோடு போலீசார் சில மணி நேரங்களிலேயே அந்த நபரின் முகவரியைக் கண்டுபிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து தீவிர விசாரணை நடத்தினர். ‘குழந்தை உங்களுடையதாகவே இருந்தாலும், இப்படி ஆபத்தான முறையில் கொண்டு செல்வது சட்டப்படி குற்றம்’ என்று கடுமையாக எச்சரித்த போலீசார், அவருக்குப் பெரிய தொகையை அபராதமாகவும் விதித்துள்ளனர்.
