திடீரென காணாமல் போன 5 வயது சிறுமி… கிணற்றில் மிதந்த சடலம்… உறைந்துபோன ராமநாதபுரம்…!

By SATHISH R on ஆனி 28, 2026

Spread the love

இராமநாதபுரம் பசும்பொன் நகர் பகுதியில், வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு தனது பாட்டியுடன் வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமி, அதிகாலையில் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் சிறுமியைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தீவிரமாக தேடி வந்த நிலையில், பக்கத்து வீட்டுப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் சிறுமியின் சடலம் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தீயணைப்புத் துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்காக உடல் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து தனது ஆறுதலைத் தெரிவித்தார்.

   

தற்போது இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுமி விளையாடச் சென்று எதிர்பாராதவிதமாகத் தானாகவே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா, அல்லது யாரேனும் அவரைத் திட்டமிட்டு கடத்திச் சென்று கொலை செய்து கிணற்றில் வீசினார்களா என்ற இருவேறு கோணங்களில் விசாரணை நகர்கிறது. இதற்கிடையே, அப்பகுதியில் இரவு நேரங்களில் வடமாநிலத் தொழிலாளர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகப் பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே சிறுமியின் மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும்.

   

சமீப நாட்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் வன்கொடுமைகளும், மர்மமான முறையில் காணாமல் போகும் சம்பவங்களும் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு எதிராகத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அண்மையில் உறுதியளித்திருந்த நிலையில், தற்போது இராமநாதபுரத்தில் அரங்கேறியுள்ள இந்த துயரச் சம்பவம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.