தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அவஞ்ச கிராமத்தைச் சேர்ந்த எடைய்யா என்ற விவசாயி, தனது மனைவி அலிவேலு, மகள் பத்மா மற்றும் மருமகன் அஞ்சநேயுலு ஆகியோரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். எடைய்யாவுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை மருமகன் பெயருக்கு மாற்றித் தருமாறு அவரது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளாக வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையில், தனது மனைவி அலிவேலுவுக்கும் மருமகன் அஞ்சநேயுலுவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக எடைய்யா சந்தேகப்பட்டதால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
எடைய்யா உயிரோடு இருக்கும் வரை நிலம் கிடைக்காது என்று எண்ணிய மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகிய மூவரும் சேர்ந்து அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். அதன்படி, வீட்டில் ஏற்பட்ட தகராறின் போது மருமகனின் உறவினர் ஒருவர் எடைய்யாவின் கழுத்தைப் பிடித்து சுவற்றில் தள்ளியுள்ளார். அவர் கீழே விழுந்ததும், தப்பி ஓட முடியாமல் மகள் பத்மா அவரது கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, மனைவி அலிவேலு இரும்பு ராடால் எடைய்யாவின் நெஞ்சு மற்றும் பிறப்புறுப்பில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
கொலைக்குத் திட்டம் தீட்டியபடியே, எடைய்யா உடல்நலக் குறைவால் திடீரென இறந்துவிட்டதாகக் கூறி அவரது மனைவி நாடகமாடியுள்ளார். உறவினர்கள் இறுதிச் சடங்கிற்காக உடலைக் குளிப்பாட்ட முயன்றபோது, அவரது மார்பிலும் உடலிலும் இருந்த ஆழமான காயங்களைக் கண்டு சந்தேகமடைந்து அலிவேலுவை விசாரித்துள்ளனர். உறவினர்களின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்குப் பயந்து அவர் உண்மையை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், நிலத் தகராறு மற்றும் கள்ளத்தொடர்பு காரணமாகக் கொலை செய்த குற்றத்திற்காக மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
