இதெல்லாம் ஒரு போராட்டமா?… மக்களைத் திரட்ட புதிய யுக்தியா?… போராட்டக் களத்தில் குத்தாட்டம் போட்ட CJP செய்தித் தொடர்பாளர்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!

By Visaka on ஆனி 28, 2026

Spread the love

டெல்லியின் ஜாந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ செய்தித் தொடர்பாளர் விஜேதா தஹியா தனது ஆதரவாளர்களுடன் மேடையில் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தொடரப்பட்ட இந்தப் போராட்டம், ஞாயிற்றுக்கிழமையுடன் எட்டாவது நாளை எட்டியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், ‘சக் தே இந்தியா’ திரைப்படத்தின் தலைப்புப் பாடலுக்கு விஜேதா தஹியாவும் சில ஆதரவாளர்களும் உற்சாகமாக நடனமாடுவதைக் காண முடிகிறது. இருப்பினும், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற துல்லியமான தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே 54.5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளதோடு, எக்ஸ் (X) தளத்தில் நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தீவிரமாகவோ அல்லது வருத்தமாகவோ காணப்படவில்லை என்றும், இது வார இறுதி கொண்டாட்டம் போல பாசாங்கு செய்யும் ஒரு நாடகம் என்றும் சமூக வலைத்தளப் பயனர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் சிலர், கூட்டத்தைக் கூட்டுவதற்காகவே இதுபோன்ற வேடிக்கையான நடனங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் தங்களது அதிருப்தியைப் பதிவிட்டு வருகின்றனர்.