விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள ஒரு கிராமத்தில், அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், அவரை உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியைச் சோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு நிலைகுலைந்து போன பெற்றோர், இது குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர்.
இப்புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெருமாள் (63) என்ற முதியவர், சிறுமியுடன் நயமாகப் பழகி வந்ததாகத் தெரியவந்தது. ஒரே ஊரைச் சேர்ந்த பெரியவர் என்பதால் பெற்றோருக்கும் அவர் மீது எந்தச் சந்தேகமும் எழவில்லை. இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்த முதியவர், ஆசை வார்த்தைகளைக் கூறியும், “இதனால் ஒன்றும் ஆகாது” என வற்புறுத்தியும் அச்சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் காரணமாகவே அந்த மாணவி கர்ப்பமடைந்தது விசாரணையில் அம்பலமானது.
சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால், முதியவர் பெருமாள் மீது உடனடியாகப் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த பெருமாள் ஊரை விட்டுத் தப்பி ஓடி, மரக்காணம் அருகிலுள்ள சவுக்குத் தோப்பு ஒன்றில் பதுங்கியிருந்தார். எனினும், தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
