மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் விபத்தாகக் கருதப்பட்ட இந்த மரணம், போலீசாரின் தீவிர சிசிடிவி மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களின் ஆய்வுக்குப் பிறகு திட்டமிட்ட கொலைச் சதியாக மாறியுள்ளது. இந்த வழக்கில் கேதனின் நிச்சயதார்த்தப் பெண் சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேதன் சவுதரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், கேதன் அணிந்திருந்த ‘ஹேர் பேட்ச்’ தனக்கு பிடிக்காததே கொலைக்கான காரணங்களில் ஒன்று என சியா கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், போலீசார் இந்த ஹேர் பேட்ச் விவகாரம் மட்டுமே கொலைக்கான முதன்மைக் காரணம் அல்ல என்றும், இது பல காரணிகளில் ஒன்று மட்டுமே என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். உண்மையில், சியாவும் சேதனும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்ததும், குடும்ப எதிர்ப்பால் அவர்களால் இணைய முடியாத சூழல் இருந்தமே இந்த சதிக்கு முக்கிய பின்னணியாகக் கருதப்படுகிறது. லோகாட் கோட்டைக்கு கேதனை அழைத்துச் செல்ல சியா பலமுறை வற்புறுத்தியதும், திருமணத்திற்கு முந்தைய வெளிநாட்டுப் புகைப்படப் படப்பிடிப்புக்கு முன்பாகவே இந்த கொலையை அரங்கேற்ற அவர்கள் திட்டமிட்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்தத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, கேதனின் தந்தை விஷால் அகர்வால் மிகுந்த வேதனையுடன் ஊடகங்களிடம் பேசியுள்ளார். தங்களுக்குள் பல ஆண்டுகளாகத் தெரிந்த சியா குடும்பத்தினரிடம், கேதனின் ஹேர் பேட்ச் குறித்து திருமணத்திற்கு முன்பே தெளிவாகக் கூறிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், “திருமணம் பிடிக்கவில்லை என்றால் நேராக மறுத்திருக்கலாம், அதற்காக ஒரு உயிரைப் பறிக்க வேண்டுமா?” என்று உருக்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். சியாவின் குடும்பத்தினரும் தங்களுக்கு இந்த காதல் விவகாரம் தெரியாது எனக் கூறியுள்ள நிலையில், இந்தச் சிக்கலான வழக்கு தற்போது மகாராஷ்டிரா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
