பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

By Swetha on ஆனி 27, 2026

Spread the love

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சி குறித்து நேர்மறையான விமர்சனங்கள் ஒருபுறம் வந்தாலும், கட்சியின் தலைவர் விஜய் முதல்வர் ஆகிவிட்டார் என்ற மிரட்டல் தொனியில் அக்கட்சியின் சில நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருவதாக நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடும் நிர்வாகிகள் மீது கட்சித் தலைமை உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கண்டமங்கலம் ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு அரசின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு மண் எடுக்கும் விவசாயிகளிடம் த.வெ.க கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாளராக இருந்த புலவேந்திரன் என்பவர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானது.

   

இந்த லஞ்சப் புகாரைத் தொடர்ந்து, சர்ச்சை எழுப்பிய த.வெ.க நிர்வாகி புலவேந்திரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த நீக்க நடவடிக்கையை த.வெ.க மாவட்ட செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலமாகவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நிர்வாகிகள் மீது த.வெ.க தலைமை இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.