ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் மாவட்டத்தைச் சேர்ந்த துலேஷ்வர் நோனியா என்பவர், அங்குள்ள பொதுத்துறை நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் அவர் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரது மகன் விஜய் சவுகான் தந்தையின் அரசு வேலையைக் கருணை அடிப்படையில் பெற ஆசைப்பட்டார். தந்தை உயிருடன் இருந்தால் வேலை கிடைக்காது என்பதால், அவரைத் தீர்த்துக் கட்ட அமித் சிங் மற்றும் அகிலேஷ் மல்லா ஆகிய இருவருக்கு ரூ.10 லட்சம் தருவதாகக் கூறி கூலிப்படையாக அமர்த்தினார்.
தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக விஜய் சவுகான் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்வதாகக் கூறி வெளியூர் சென்றுவிட்டார். கடந்த 19-ஆம் தேதி இரவு, பணி முடிந்து வெளியே வந்த துலேஷ்வரை மர்ம நபர்கள் இருவரும் வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று, ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்துப் பெரிய கல்லால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் அது விபத்து போலத் தெரிய வேண்டும் என்பதற்காக உடலைச் சாலையின் நடுவே போட்டுவிட்டுத் தப்பினர்.
மறுநாள் காலையில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த துலேஷ்வரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நிலக்கரி சுரங்கத்தின் அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அமித் சிங்கும் மல்லாவும் துலேஷ்வரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்ததில், அரசு வேலைக்காக மகன் விஜய் சவுகான் கொடுத்த கூலிப்படையின் ஒப்பந்தத்தின் பேரில்தான் இந்த கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, பெற்ற தந்தையையே கொடூரக் கொலை செய்யத் தூண்டிய மகன் விஜய் சவுகான் மற்றும் கொலையாளிகள் இருவர் உட்பட மொத்தம் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
