சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் உள்கட்சி விவகாரங்கள் ஒவ்வொன்றாக வெடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கட்சியின் பாரம்பரிய நிர்வாகிகளையும் அடிமட்டத் தொண்டர்களையும் தாண்டி, ஒரு தனியார் அரசியல் உத்தி வகுப்பாளர் நிறுவனம் அறிவாலயத்தின் அதிகார மையத்தை எவ்வாறு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்பது குறித்த அதிர்ச்சித் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டங்களில் என்ன பேச வேண்டும், எந்தப் பிரச்சினையில் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது முதல் ஊடகக் கையாளுதல் வரை அனைத்தையும் இந்த நிறுவனமே பின்னணியில் இருந்து இயக்கியதாகக் கூறப்படுகிறது. மூத்த தலைவர்களின் ஆலோசனைகளை விட, இந்த நிறுவனத்தின் ‘டேட்டா’ அறிக்கைகளுக்கே தலைமை முக்கியத்துவம் கொடுத்தது, கட்சிக்குள் நீண்டகாலமாகவே புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது.
இந்த கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு ஆரம்பம் முதலே கட்டுப்பட மறுத்த ஒருவராக உதயநிதி ஸ்டாலின் இருந்துள்ளார். இளைஞரணிச் செயலாளராகத் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கியது முதலே, அவர் இந்த நிறுவனத்தின் பிடியில் சிக்காமல் தன் சொந்தப் பாதையிலேயே பயணித்து வந்துள்ளார். அடிமட்டத் தொண்டர்களுடனும், மாவட்ட நிர்வாகிகளுடனும் நேரடியாகத் தொடர்பில் இருந்ததால், இந்தத் தனியார் நிறுவனத்தால் உதயநிதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் மேஜை அறிக்கைகளை விட, களத்தில் இருக்கும் மனிதர்களின் நிஜமான நிலவரங்களே முக்கியம் என்பதில் அவர் உறுதியாக நின்று, பாரம்பரிய அரசியலையே முன்னிறுத்தினார்.
தற்போதைய தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியின் எதிர்கால முகமாகவும், அடுத்தகட்டத் தலைவராகவும் உதயநிதி ஸ்டாலின் விஸ்வரூபம் எடுத்து வருகிறார். தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வுப் பிரிவின் பின்னால் உதயநிதியின் நேரடி வழிகாட்டுதல் இருந்ததை உணர்ந்த அந்த அரசியல் உத்தி வகுப்பாளர் குழு, இப்போது எப்படியாவது உதயநிதியையும் தங்கள் வளைக்குள் கொண்டு வர தீவிரமாக முயன்று வருகிறது. பல்வேறு புதிய திட்ட அறிக்கைகள் மற்றும் எதிர்கால அரசியல் கணக்குகளை முன்வைத்து அவர்கள் உதயநிதியை அணுகி வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அந்த நிறுவனத்தின் எந்தவொரு ஆலோசனையையும் ஏற்க உதயநிதி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. திமுகவின் இந்த வீழ்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனத்தின் தவறான கணக்குகளும், போலி அறிக்கைகளுமே காரணம் என்று நம்பும் அவர், “கார்ப்பரேட் பாணியில் அரசியல் செய்ததால் தான் தொண்டர்களுக்கும் தலைமைக்கும் இடையே இடைவெளி விழுந்தது; இனி பாரம்பரிய நிர்வாகிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதே கட்சியை மீட்கும் ஒரே வழி” என்று மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். உதயநிதிக்கு விரைவில் ப்ரோமோஷன் தரப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகும் வேளையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர் சொல்லியிருக்கும் இந்த ‘நோ’, திமுக உள்கட்சி அரசியலில் ஒரு பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
