தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்டவற்றுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். பின்னர், அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதில், விருதுநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக ஜெகதீஸ்வரி நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், விருதுநகரில் நடைபெற்ற விளையாட்டுத் துறை நிகழ்ச்சியில் பொறுப்பு அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்றார். விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் முதலீட்டு ஊக்கத்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலில் இடம்பெற்றிருந்தது. அதற்கு அடுத்ததாக பொறுப்பு அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இருந்ததை கவனித்த அவர், அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. பொறுப்பு அமைச்சரின் பெயருக்கே முதன்மை வழங்கப்பட வேண்டும் என்றும், அதன் பின்னரே பிற அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் மேடையிலேயே தனது கருத்தை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அருகில் இருந்த மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து விளக்கம் கேட்க உத்தரவிட்டார். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விவாதம் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. புதிய அரசு பொறுப்பேற்ற சில காலத்திலேயே பெயர் வரிசை தொடர்பாக அமைச்சர் தனது எதிர்ப்பை பதிவு செய்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
