“வெறும் 60 வினாடி இடைவெளி”… வெனிசுலாவை புரட்டிப்போட்ட இரட்டை நிலநடுக்கம்… 235 பேர் உயிரிழப்பு… நெஞ்சை உலுக்கும் தற்போதைய நிலவரம்…!

By Nanthini on ஆனி 26, 2026

Spread the love

வெனிசுலா நாட்டில் புதன்கிழமை அன்று வெறும் ஒரு நிமிட இடைவெளியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இரு மாபெரும் நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து தாக்கியுள்ளன. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் அந்நாடு கண்டிராத இந்த மிக மோசமான இயற்கை பேரிடர் ஒட்டுமொத்த வெனிசுலாவையும் உலுக்கியெடுத்துள்ளது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை ஏற்பட்ட இந்த அதிர்வுகளால் தலைநகர் கராகஸ் மற்றும் லா குவைரா உள்ளிட்ட பகுதிகளில் எண்ணற்ற கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 188-லிருந்து 235 ஆக அதிகரித்துள்ளதாகவும், 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கார்லோஸ் அல்வராடோ தெரிவித்துள்ளார்.

இந்த கடுமையான நிலநடுக்க அதிர்வுகள் காரணமாக மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்ததால், குடியிருப்பு மற்றும் அலுவலக கட்டிடங்கள் உடனடியாக காலி செய்யப்பட்டன. பேரிடரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கராகஸ் நகருக்கு அருகிலுள்ள சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போதைய அசாதாரணச் சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாடு தழுவிய அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளார். மேலும், பள்ளி கட்டிடங்களைத் தற்காலிக நிவாரண முகாம்களாகவும், நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையங்களாகவும் பயன்படுத்துவதற்காகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

   

மறுபுறம், பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை என்னவென்றே தெரியாத சூழலில், இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தங்களது உறவினர்களைத் தேடி அலையும் மக்களின் நெஞ்சை உலுக்கும் காட்சிகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. வீடுகளை இழந்து வீதிக்கு வந்த கராகஸ் நகர மக்கள், தங்களது செல்லப் பிராணிகளுடன் நடைபாதைகளில் தஞ்சம் புகுந்து தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெனிசுலாவுக்குத் தேவையான உதவிகளை வழங்க அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, பொலிவியா, சிலி, பனாமா மற்றும் ஈக்வடார் உள்ளிட்ட பல உலக நாடுகள் முன்வந்துள்ளன.

   

பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தலைமையிலான அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உள்கட்டமைப்பு, மருத்துவமனைகள் மற்றும் வீடுகளைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க முதற்கட்டமாக 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மறுசீரமைப்பு நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், இந்த பேரிடரில் தங்களது தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை இழந்த மக்களுக்கு உதவும் வகையில் பொது மற்றும் தனியார் வங்கிகள் மூலமாகச் சிறப்புக் கடன் உதவிகள் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.