வெனிசுலாவில் நேற்று முன் தினம் மாலை சில நொடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கை பேரிடர் நிகழ்வதற்கு சற்று முன்பாகவே, அங்குள்ள மக்களின் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு “கூகுள் நிலநடுக்க எச்சரிக்கை” அனுப்பப்பட்டது. முதல் நிலநடுக்கம் மாலை 6.04 மணிக்கு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே இந்த எச்சரிக்கை கிடைத்ததால், மக்கள் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடிந்தது.
ஒவ்வொரு நவீன ஸ்மார்ட்போனிலும் அக்ஸிலரோமீட்டர் என்ற மிக முக்கிய சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. நாம் மொபைலைத் திருப்புவதற்கும், நமது அசைவுகளைக் கணக்கிடுவதற்கும் பயன்படும் இந்த சென்சார், நிலநடுக்கத்தின் போது ஏற்படும் ஆரம்பக்கட்ட அதிர்வுகளையும் மிகத் துல்லியமாகக் கண்டறியும் திறன் கொண்டது. நிலநடுக்கத்தின் முதன்மை அலைகளான ‘P-அலைகளை’ இந்த சென்சார் கண்டறிந்தவுடன், அந்தத் தரவை உடனடியாக கூகுளின் தரவுத்தளத்திற்கு அனுப்பி வைக்கிறது.
ஒரே பகுதியில் உள்ள பல நூறு ஸ்மார்ட்போன்களில் இருந்து ஒரே நேரத்தில் இதுபோன்ற அதிர்வுத் தகவல்கள் வரும்போது, கூகுள் சர்வர் அதை நிலநடுக்கம் என உறுதி செய்கிறது. நிலநடுக்கத்தின் மிக ஆபத்தான இரண்டாம் கட்ட அலைகள் மக்களைத் தாக்குவதற்கு முன்பாகவே, ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இணைய நெட்வொர்க் மூலமாகப் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கும் எச்சரிக்கை சிக்னல் அனுப்பப்படுகிறது. இந்த நவீன தொழில்நுட்பம் பேரிடர் காலங்களில் பல மனித உயிர்களைக் காக்கும் கேடயமாக உருவெடுத்துள்ளது.
