வெனிசுலா நாட்டில் 7.2 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து இரண்டு மிக கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இரட்டை நிலநடுக்கங்களால் தலைநகர் காரகாஸ் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக குலுங்கின. இதனால் காரகாஸில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல சரிந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடுகளான கொலம்பியா மற்றும் பிரேசில் வரை உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான ‘சிமோன் பொலிவர் சர்வதேச விமான நிலையம்’ மிக மோசமாக சேதமடைந்துள்ளது. நிலநடுக்கத்தின் போது விமான நிலையத்தின் மேற்கூரை, கான்கிரீட் துண்டுகள் மற்றும் மின்விளக்குகள் பயணியர் அமர்ந்திருந்த பகுதிகள் மற்றும் செக்-இன் கவுண்டர்கள் மீது சரிந்து விழுந்தன. மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு விமான நிலையம் முழுவதும் இருள் சூழ்ந்ததால், பயணியர் மற்றும் ஊழியர்கள் பயந்து அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான திறந்தவெளி மைதானங்களை நோக்கி ஓடினர்.
விமான நிலையத்தின் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சீர்குலைந்துள்ளதால், அங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுவது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்றாக மாறியுள்ளது. இதன் காரணமாக, இந்த காரகாஸ் சர்வதேச விமான நிலையம் காலவரையறையின்றி மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. விமான நிலையத்திற்குள் ஏற்பட்ட இந்த பயங்கரமான சேதங்கள் மற்றும் பயணியர் அலறியடித்து ஓடும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
