மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்பு மற்றும் தனக்கு இருந்த திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழு நடத்திய ரகசிய விசாரணையில் பல முக்கிய உண்மைகளை ஒப்புக்கொண்டுள்ளார். ரஷிய பிரிட்ஜ் விளையாட்டு வீராங்கனை மிலா அன்டோனோவா, அணு இயற்பியலாளர் கரிமா நிக்மதுலினா மற்றும் தொழில்முனைவோர் ஆலிஸ் ஜேக்கப்ஸ் நெசல்ரோட் ஆகிய மூன்று பெண்களுடன் தனக்கு தகாத உறவு இருந்ததை அவர் சாட்சியமாக அளித்துள்ளார்.
இந்த உறவுகள் பற்றி எப்ஸ்டீனுக்குத் தெரிந்திருந்ததாகவும், தனது துரோகம் குறித்த பொய்களைப் பரப்பி எப்ஸ்டீன் தன்னை மீண்டும் இணையுமாறு வற்புறுத்த முயன்றதாகவும் கேட்ஸ் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீன் தன்னை நேரடியாக மிரட்டவில்லை என்றாலும், மறைமுகமாக பிளாக்மெயில் செய்யவே அவ்வாறு நடந்துகொண்டதாக தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார். எனினும், எப்ஸ்டீனின் பாலியல் குற்றங்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை பெற செல்வந்தர்களை அறிமுகப்படுத்துவார் என்ற காரணத்திற்காகவே எப்ஸ்டீனை 4 ஆண்டுகளில் 12 முதல் 14 முறை நேரில் சந்தித்ததாக பில் கேட்ஸ் விளக்கியுள்ளார். மேலும், அண்மையில் வெளியான எப்ஸ்டீன் ஆவணங்களில் தனக்கு பால்வினை நோய் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்த தகவலை அவர் முற்றிலும் மறுத்துள்ளார். கடந்த 2021 இல் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து பெற இந்தத் தகாத உறவுகளே காரணம் என்று கூறப்படுகிறது
