தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கீசார பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சுவாமி என்பவருக்கும், ஜோதி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 6 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஹரிகிருஷ்ணா என்ற மகனும் இருந்தனர். திருமணமான சில மாதங்களிலேயே ஜோதிக்கு நவீன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் சுவாமி வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் நேரங்களில், ஜோதி தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் தனிமையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த மே 29-ஆம் தேதி சுவாமி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், ஜோதி தனது கள்ளக்காதலன் நவீனை வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்தபோது, ஜோதியின் 2 வயது மகன் ஹரிகிருஷ்ணா தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஜோதியும் நவீனும் சேர்ந்து குழந்தையைச் சரமாரியாகத் தாக்கி தூக்கி வீசியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்தக் கசிவு ஏற்பட்ட குழந்தையை, அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனைத் தொடர்ந்து, குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் கூறி ஜோதி தனது கணவரை நம்ப வைத்துள்ளார். மனைவியின் பேச்சை நம்பிய சுவாமியும் குழந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளார். ஆனால், சில நாட்களிலேயே ஜோதியின் நடத்தையில் சுவாமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டின் சுவரில் இருந்த ரத்தக் கறையைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குழந்தை இறந்த நாளில் ஜோதியும் நவீனும் ஒன்றாகச் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுவாமி அளித்த புகாரின் பேரில், ஜூன் 20 அன்று போலீசார் ஜோதியைக் கைது செய்து விசாரித்ததில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்துக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இந்தத் துயரச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் நவீனை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கள்ளக்காதலுக்காகப் பெற்ற குழந்தையையே தாயே கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
