திருமாவளவன் போட்ட கணக்கு… விஜய்க்கு விசிக கொடுத்த 3 ‘அதிர்ச்சி’ டிமாண்டுகள்… கசிந்த போயஸ் கார்டன் வட்டார ரகசியம்…!

By Nanthini on ஆனி 25, 2026

Spread the love

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான கூட்டணி உறவில் தற்போது பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியை அமைத்தது. அப்போது, “இடதுசாரிகளின் நிலைப்பாடே எங்களது நிலைப்பாடு” என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். ஆனால், இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்காமல் அமைச்சர் பதவிகளை நிராகரித்த நிலையில், விசிக அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறி தவெக ஆட்சியில் இணைந்தது. விசிக சார்பில் வன்னி அரசு சமூகநீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆட்சி அமைந்த பின்னரும் தவெக தலைமைக்கு விசிக தொடர்ந்து பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சமூகநீதித்துறை திருப்திகரமாக இல்லை என்றும், வேறு முக்கியத் துறையை ஒதுக்க வேண்டும் என்றும் விசிக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமன்றி, வரவிருக்கும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட தவெக சம்மதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், பல்வேறு வாரியப் பதவிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற டிமாண்டையும் முன்வைத்து விசிக சீறி வருகிறது. ஆனால், முதலமைச்சர் விஜய் இந்த கோரிக்கைகள் எதற்கும் இதுவரை பச்சைக்கொடி காட்டாமல் அமைதி காத்து வருகிறார்.

   

விஜய்யைப் பொறுத்தவரை தற்போதைய சூழலில் விசிகவின் ஆதரவு அவசியமாக இருந்தாலும், அது இடைத்தேர்தல் வரை மட்டுமே என்ற கணக்கில் தவெக இருப்பதாக விமரிசகர்கள் கருதுகின்றனர். இடைத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துவிட்டால், விசிகவை கழற்றிவிடலாம் என்பது தவெகவின் திட்டமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், அதற்கு முன்பாகவே விசிக கூட்டணியை விட்டு வெளியேறினால், அது ஆட்சி நிலைத்தன்மைக்கும் கூட்டணியின் பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரத்தை விஜய் மிகவும் நிதானமாக அணுகி வருகிறார்.

   

விசிகவின் இந்த தொடர் நெருக்குதலுக்கு மாற்றாக, பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வரலாம் என்ற ஆலோசனையும் தவெக தரப்பில் எழுந்துள்ளது. ஆனால், பாமகவின் அரசியல் பின்னணியும், கடந்த காலங்களில் பாஜாகவுடன் அவர்கள் காட்டிய நெருக்கமும் தவெகவின் தற்போதைய மதச்சார்பற்ற, இடதுசாரி சிந்தனை கொண்ட கூட்டணிக் கட்டமைப்பிற்குப் செட்டாகாது என்ற அச்சமும் உள்ளது. “வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாக” பாமகவின் வருகை அமைந்துவிடக் கூடாது என தவெகவின் ஒரு தரப்பினர் எச்சரிக்கின்றனர். இதனால், தற்போதைக்கு விசிகவின் கோரிக்கைகளைக் கிடப்பில் போட்டுவிட்டு, அழுத்தம் அதிகரிக்கும் பட்சத்தில் ஒன்று அல்லது இரண்டு டிமாண்டுகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு, மீதமுள்ளவற்றை இடைத்தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என தவெக தலைமை இப்பிரச்சினையை தற்காலிகமாக ஆறப்போட்டு வைத்துள்ளது.