திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு பேருந்து நடத்துனர் ஒருவர், மாற்றுத்திறனாளி பயணியை மனிதாபிமானமே இன்றி அநாகரிகமாக நடத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிரில்குமார் என்பவர், அவசர அலுவல் காரணமாக மதுரைக்குச் செல்வதற்காக ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் கோவை – மதுரை தடம் எண் கொண்ட அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே டிக்கெட் பரிசோதனை மற்றும் விநியோகம் தொடங்கியபோதுதான் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
நடத்துனர் பிச்சைமணி பயணிகளிடம் டிக்கெட் கேட்டு வந்தபோது, சிரில்குமார் தனக்குரிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டையைக் காண்பித்து, அரசு விதிகளின்படி சலுகைக் கட்டணத்தில் டிக்கெட் வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால், அந்த அடையாள அட்டையை முறையாகப் பரிசீலிக்க மறுத்த நடத்துனர் பிச்சைமணி, சக பயணிகளுக்கு முன்னிலையில் சிரில்குமாரை நோக்கி ஏளனமான கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளார். “இந்த போட்டோவில் இருப்பது யார், இதை வைத்து உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் யூஸ் பண்ணுவீர்கள்? உன் முகத்திற்கும் இந்த போட்டோவிற்கும் சம்பந்தமே இல்லை, அடையாளமே தெரியவில்லை” என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததுடன், “வண்டியை விட்டு உடனடியாக கீழே இறங்கு” என்று அதிகாரத் தொனியில் மிரட்டியுள்ளார்.
நடத்துனரின் இந்த அத்துமீறலால் அதிர்ச்சியடைந்த பயணி சிரில்குமார், “நான் முறையான, ஒரிஜினல் கார்டைத்தான் தருகிறேன்; இதில் எந்தத் தவறும் இல்லை. நான் ஒரு மாற்றுத்திறனாளி, என்னை ஏன் இறங்கச் சொல்கிறீர்கள்? நான் வண்டியை விட்டு இறங்க முடியாது, பஸ்ஸில்தான் உட்கார்ந்திருப்பேன்” என்று உறுதியோடு தெரிவித்துள்ளார். தனக்கு நேர்ந்த இந்த அநீதியை சிரில்குமார் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தபோதும், நடத்துனர் பிச்சைமணி சற்றும் அச்சமின்றி தொடர்ந்து டிக்கெட் தராமல் இழுத்தடித்து, அந்தப் பயணியை மிகவும் அநாகரிகமான முறையில் வசைபாடியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் பரவி பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசைப் பொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் பல்வேறு கட்டணச் சலுகைகளையும், முன்னுரிமைகளையும் வழங்கி தொடர்ந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், களத்தில் பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய அரசு ஊழியரே, சட்டம் மற்றும் விதிமுறைகளை மதிக்காமல் ஒரு மாற்றுத்திறனாளிப் பயணியை இவ்வாறு மனிதநேயமின்றியும் அநாகரிகமாகவும் நடத்தியிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நடத்துனர் பிச்சைமணி மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலுவாக வலியுறுத்தி வருகின்றனர்.
