“பத்திரப்பதிவில் அதிரடி திருப்பம்.. தமிழக அரசின் புதிய சட்டப்பிரிவை அதிரடியாக ரத்து செய்தது உயர் நீதிமன்றம்…!!”

By Swetha on ஆனி 24, 2026

Spread the love

கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் குமார் துகார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத்தாக்கல் செய்திருந்தார். அதில், போலி ஆவணப் பதிவுகளைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த பதிவுச் சட்டத்தின் புதிய பிரிவு 34C-இன் படி, சொத்து பதிவுகளுக்கு அசல் ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இது தொடர்பாகச் சார்பதிவாளர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், அசல் ஆவணங்கள் இல்லாதபோது அவர்கள் பதிவுகளைச் செய்ய மறுப்பதாகவும், இதனால் பொதுமக்கள் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாவதாகவும் கூறி, அந்தப் பிரிவைத் தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று முக்கியத் தீர்ப்பை வழங்கியது. பத்திரப்பதிவின் போது அசல் ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், ஆவணப் பதிவுகளைச் செய்ய இயலாத நிலை தற்போது நீடிப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். பொதுமக்களின் இந்தச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பதிவுச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத் திருத்தமான பிரிவு 34C-ஐ ரத்து செய்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.

   

சட்டப் பிரிவு ரத்தோடு மட்டுமின்றி, பொதுமக்கள் சொத்து விவரங்களை அறிந்துகொள்ள விண்ணப்பிக்கும் வில்லங்கச் சான்றிதழ் குறித்தும் நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, இனிவரும் காலங்களில் ஈசி கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, சம்பந்தப்பட்ட சொத்தின் சர்வே எண் மற்றும் கதவு எண் ஆகிய விவரங்களுடன் கூடிய வில்லங்கச் சான்றிதழை வழங்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர். மேலும், இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் பதிவுத்துறைத் தலைவர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளனர்.