மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியுள்ளது. ஹெத்ராம் கோரி என்ற 30 வயது இளைஞர், பிரஹலாத் கோரி என்ற காய்கறி வியாபாரியிடம் தக்காளி விலை கேட்டுள்ளார். சந்தை விலை 50 ரூபாயாக இருக்கும்போது, வியாபாரி ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் எனக் கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
விலை உயர்வை எதிர்த்துக் கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த வியாபாரி பிரஹலாத், தனது உறவினர்களான ராம்பாபு, ராஜா, ராம்கரன் மற்றும் முன்னி கோரி ஆகியோரைத் திரட்டிக்கொண்டு, ஹெத்ராம் கோரியின் வீட்டிற்குள் தடிகளுடன் புகுந்துள்ளார். அங்கு அவர்கள் ஹெத்ராமைத் தடியால் கொடூரமாகத் தாக்கியதில் அவரது தலை உடைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். தடுக்க வந்த அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த வாலிபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தராம்பூர் போலீஸார், காய்கறி வியாபாரி பிரஹலாத் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட ஐந்து பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் பல்வேறு கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இரு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்ததை அடுத்து போலீஸார் ‘கிராஸ்-கேஸ்’ பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
