தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது என்று முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிரடியாகத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எமர்ஜென்சி (நெருக்கடி நிலை) காலத்திலேயே எதற்கும் அஞ்சாமல் நின்ற இயக்கம் தான் திமுக. எங்கள் மடியில் கனமில்லை, அதனால் எங்களுக்கு வழியில் எந்தப் பயமும் இல்லை” என்று முழங்கினார்.
மேலும், திமுக மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால், அதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் சவால் விடுத்த அவர், எவ்வளவுதான் நெருக்கடிகளைக் கொடுத்தாலும் “அடிக்க அடிக்க உயர்ந்து எழும்புகிற பந்தாகத்தான்” திமுக என்றும் விளங்கும் எனக் கூறி கட்சியின் உறுதியை வெளிப்படுத்தியுள்ளார்.
