634 கோடி ஊழல் வழக்கு… முன்னாள் அமைச்சர் நேருவுக்கு செக் வைத்த விஜய் அரசு… ஜூலை 10-ல் காத்திருக்கும் பெரிய சம்பவம்…!

By Nanthini on ஆனி 23, 2026

Spread the love

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய தவெக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போதைய அமைச்சர் கே.என்.நேருவின் துறையில், 2,538 பொறியாளர்கள் நியமனத்திற்கு லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முந்தைய திமுக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தது. இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, திமுக அரசு தாக்கல் செய்திருந்த அந்த மறுஆய்வு மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்து தவெக அரசின் புதிய மனுவை தாக்கல் செய்தார். இதன் மூலம் கே.என்.நேரு மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள அரசு தயார் என்ற அதிரடி சிக்னலை முதலமைச்சர் விஜய் தரப்பு திட்டவட்டமாக கொடுத்துள்ளது.

அரசின் இந்த திடீர் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கே.என்.நேரு தரப்பு, ஆட்சி மாறினாலும் முந்தைய அரசின் சட்டபூர்வ நிலைப்பாட்டை மாற்றக் கூடாது என நீதிமன்றத்தில் கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், அதுவரை இந்த வழக்கின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்ற இடைக்கால தடையையும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஊழல் வழக்கு, அடுத்த விசாரணையில் எந்த மாதிரியான திருப்பங்களைச் சந்திக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.